February 1

உண்மையான சன்மார்க்க ஒழுக்கத்தில் இருந்தால் கிடைக்கும் அனுபவங்கள்

1. ஆன்ம லாபம் அடைவதற்குத் தேகமே முக்கியம் என்பதை உணர்ந்து தேக நட்டம் வராமல் பாதுகாத்துக்கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்கிறார்கள்.

2. ஜீவகாருண்ய மெய்சாதனத்திற்கு உகந்த வகையிலும் அதைத் தெரிந்து அந்நெறிப்படி ஒழுகுவதற்கும் ஏற்ற வகையில் தேகத்தில் உள்ள கருவிகளும், கரணங்களும் சரி செய்யப்படுகின்றன. உதாரணத்திற்குக் கண்ணும், மனமும் பக்குவப்படுகின்றன.

3. பரம காரண கருணைமிகு கிரணச் சுடர்கள் தேகத்தில் உள்ள தத்துவங்களை வேதியல் செய்து தூய்மைப்படுத்தும் தன்மைக்கு ஏற்றவகையில் மேற்படி தத்துவத்தின் செறிந்த அணுக்களைப் பதப்படுத்துகின்றன.

4. எப்போதும் ஆண்டவருடைய நினைவையும், எப்போதும் ஆண்டவர் சமூகத்தில்தான் இருக்கின்றோம்,எச்செயலும் அவர் சமூகத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனும் பிரியாத் தன்மையையும் உணர்த்தி வழங்குகின்றது.

5. மேல்விளைவை உண்டு பண்ணக்கூடிய நன்முயற்சிக்கு ஏதுவாய் கவன சக்தி, ஞாபகத் தன்மை, மறதி கருணை இன்மை, தெய்வ உறவுக்குள்ள உணர்வு, பொய்யற்ற தன்மை, சத்திய உணர்ச்சிக்குரிய ஏதுக்கள், திருவருள்குறித்த அவா, தன்
குற்ற உணர்தல், தினசரி ஒழுக்க கட்டுப்பாடு, உலகியல் செயல் நடைமுறைத் தூய்மை முதலிய மேலான பண்புகளை வழங்குகின்றன.

6. புறத்தில் பழகும் தன்மையிலும் இல்லத்திற்கு வரும் மக்களின் நடைமுறையிலும் பரிசுத்தமான மன நினைவுகளையும், பக்குவத்திற்குரிய பண்பையும், பயத்தையும் உண்டாக்குவதற்குச் சாதனமாய் விளங்குகின்றது.

7. தடைபடாது, விலகாது ஆண்டவர் தீபத்தில் சதா விளங்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுவதால் நனவிலும், கனவிலும் கூட தீபம் ஞாபகம் வரும் பட்சத்தில் உறவு வலுப்படுவதற்கு ஆதாரமாகிறது.

8. தெய்வத்திடத்தில் பிரியமும், ஜீவர்களிடத்தில் தயவும் உண்டாவதற்கு ஏற்றதன்மையில் கரணங்களின் தத்துவ அணுக்களின் தன்மை மிருதுவாக்கப்படுகிறது.

9. ஜீவகாருண்ய பரிச்சயத்தில் உண்டாகும் வேதியல் மாற்றத்திற்கு ஏதுவான உபகார தன்மைமிக்க சுத்த அக்கினியால் விளைவிக்கக் கூடிய அனுபவத்திற்கு உகந்த வகையில் அடிக்கடி படியும் தூசுத்தன்மையை அகற்றி, தூசு ஒட்டாதவண்ணமுடைய பசைத் தன்மையைப் போக்கி பக்குவமான பதத்தன்மையை வழங்குகிறது.

10. பிண்டத்தில் விளங்கும் ஜீவனை, அண்டத்தில் விளங்கும் ஜீவனோடு உரிமைப்படுத்தி உபசாந்த நிலையதாக்கக்கூடிய தன்மையை முற்றிலும் வாங்குவதற்கு ஒரே வழியாயினும் ஓதாது உணர்வதற்கும், சாகாக் கல்வி பயில்வதற்கும். சுத்த சன்மார்க்கப் பயன் அடைவதற்கும் தருமச்சாலையாக விளங்குகின்ற
தனித்தலைவனின் திருவடித் துணை இது எனஅறிவதற்கும், அதன்மீது அன்பு செலுத்தி, நம்பிக்கை வைத்து அனுபவிப்பதற்கும், இதனால் இது என்று அடையாளம் காட்டுவதற்கும் பிரத்யட்ச முன்னிட்ட காட்சியாகக் காண்பித்து அறிவதற்கும், உகந்த உத்தமப் பொருளாய் தீபம் விளங்குகின்றது.