திருவருட்பா திருவருண் முறையீடு
1. துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ
சனியாம் என் வல்_வினைப் போதனையோ என்-கொல் சாற்றுவதே
2. என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன்
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம்
பொன்னே மின் நேர் சடைத் தன் நேர்_இலாப் பரிபூரணனே
3. தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள்
துண்டு ஆர் மலர்ச் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே
4. பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண்
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால்
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிறச்
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே
5. விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்யத்
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின்
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர்
இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே
6. விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-
கண்_உடையாய் நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய்
பண்_உடையாய் திசைப் பட்டு_உடையாய் இடப் பாலில் அருள்
பெண்_உடையாய் வந்திப் பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே
7. விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம்
சடை_உடையாய் கொன்றைத் தார்_உடையாய் கரம் தாங்கு மழுப்
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால்
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே
8. கீள்_உடையாய் பிறைக் கீற்று_உடையாய் எம் கிளைத் தலை மேல்
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய்
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய்
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே
9. நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன்
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே
10. பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய்
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம்
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே
11. தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னைத் தெரிந்து அடுத்தோர்
தான் சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளு என்றே
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே
12. வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார்
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர்
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு
இன்றே அக் கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே
13. கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம்
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம்
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர்
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே
14. வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள்
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே
15. நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்று
தானோ நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல்
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே
16. மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்
பொன் போலும் மேனி எம் புண்ணியனே எனைப் போற்றிப் பெற்ற
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே
17. அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன்
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால்
துன்பால் இடரைப் பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே
18. என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம்
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனைப் போய் அடுத்தேன்
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன்
முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே
19. பொன்_உடையார்-தமைப் போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு
என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும்
பின்னிடையேன் அவர் முன் அடையேன் எனப் பேசி வந்தேன்
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே
20. சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம்
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே
21. அருள் அறியாச் சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு
இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருள் அறியாப் பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன்
தெருள் அறியாச் சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே
22. அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால்
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால்
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனைத் தாங்கிக்கொள்ளே
23. சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்சக்
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை எனக் கூறுகின்றேன்
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே
24. கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும்
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே
25. சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னைப்
போல் படும் பாடு நல்லோர் சொலக் கேட்கும் பொழுது மனம்
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூங்
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே
26. வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர்த்
தாளே வருந்த மணிக் கூடல் பாணன்-தனக்கு அடிமை
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும்
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே
27. அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப் பிச்சை
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்கச் சொல்_பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரிலே பிச்சைச் சோறு எடுத்துக்
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குணக் குன்றமே
28. நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்துக்
கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள்
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே
29. தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_
நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே
30. நடும்பாட்டை நாவலன் வாய்த் திரு_பாட்டை நயந்திட்ட நீ
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ்ப் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து
இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான்
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே
31. ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்
போட்டாலும் வேறு இடம் கேளேன் என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே
32. சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அ நாள்
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப்
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப்
பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே
33. நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இத் தன்மையினால்
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள்
சேயே எனைப் புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே
34. தெருளும் பொருளும் நின் சீர் அருளே எனத் தேர்ந்த பின் யான்
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே
35. பெண்ணால் மயங்கும் எளியேனை ஆளப் பெரும் கருணை
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே
36. நெறி கொண்ட நின் அடித் தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடும் கலிப் பேய்
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முடக் கிழ நாய்
வெறிகொண்டதேனும் விடத் துணியார் இ வியன் நிலத்தே
37. மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம்
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன
விதியா இனிப் பட மாட்டேன் அருள்செய் விடையவனே
38. கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்குச் சும்மாச்
சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்து அடுத்தேன்
அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே
39. ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்கு கண்டாய்
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே
40. பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின்
மறை முடித் தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன்
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே
41. நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும்
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல்
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள்
இடம் கொண்ட தெய்வத் தனி முதலே எம் இறையவனே
42. விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர்
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன்
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருளக் குறித்திலையேல்
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே
43. சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-
பால் வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்கக்
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே
44. ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம்
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே
45. முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழுக் கருணை
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால்
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே
46. வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன்
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே
47. நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள்
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய்
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல்
தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே
48. உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றித்
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல் அறிவு அளித்தே உனைப் பாடச்செய்தாய்
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே
49. மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-
தான் எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம்
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே
50. வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றிச்
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின்
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என்
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே
51. சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த
கற்பகமே உனைச் சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம்
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே
52. வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள்
பெரும் செல்வமே எம் சிவமே நினைத் தொழப்பெற்றும் இங்கே
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமைத் தளர் நடையால்
அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே
53. கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்கத்
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னைத் தெரிந்து அடுத்தென்
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல்
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே
54. மருப் பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர்
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே
55. பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ
ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய்
மாழையைப் போல் முன்னர்த் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள
வாழையைத் தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே
56. கருத்து அறியாச் சிறியேன் படும் துன்பக் கலக்கம் எல்லாம்
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றித்
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும்
எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே
57. வான் வேண்டிக் கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய்
தான் வேண்டிக்கொண்ட அடிமைக்குக் கூழ் இடத் தாழ்ப்பது உண்டே
58. பை உரைத்து ஆடும் பணிப் புயத்தோய் தமைப் பாடுகின்றோர்
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான்
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே
59. மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என்
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம்
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன்
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே
60. எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால்
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம்
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன்
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே
61. பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம்
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னைத்
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார்
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே
62. வாய் மூடிக் கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம்
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையைச்
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழக் கண்டும் திகழ் முலையைத்
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே
63. கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக் கொள்ளித்
தேள் வேண்டுமோ சுடத் தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர்
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய்
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே
64. விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வரப்
படை இலையோ துயர் எல்லாம் துணிக்கப் பதம் கொள் அருள்
கொடை இலையோ என் குறை தீர நல்கக் குலவும் என் தாய்
புடை இலையோ என்றனக்காகப் பேச எம் புண்ணியனே
65. நறை உள தே மலர்க் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல்
பிறை உளதே கங்கைப் பெண் உளதே பிறங்கும் கழுத்தில்
கறை உளதே அருள் எங்கு உளதே இக் கடையவனேன்
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே
66. சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னைத் திகைப்பிக்கும் இ
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்துச் சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையினாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே
67. புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ்ச்
சொல் அளவாநின்று இரப்போர் இரக்க நல் சொன்னங்களைக்
கல் அளவாத் தருகின்றோர்-தம்பாலும் கருதிச் சென்றோர்
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே
68. பிறை சூழ்ந்த வேணி முடிக் கனியே எம் பெரும் செல்வமே
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும்
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்றக் குறித்து அருளே
69. கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையைப் போல்
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம்
புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டிப் போல் உதிர்ந்தே
70. மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில்
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இப் பொய்யனை நீ
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே
71. அருள்_கடலே அக் கடல் அமுதே அ அமுதத்து உற்ற
தெருள் சுவையே அச் சுவைப் பயனே மறைச் சென்னி நின்ற
பொருள் பதமே அப் பதத்து அரசே நின் புகழ் நினையா
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே
72. அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின்
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின்
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ எனச் சூழ்ந்து அடைந்தேன்
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே
73. தேட்டக் கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை
ஆட்டக் கண்டேன் அன்றி அக் குரங்கால் அவர் ஆடச் சற்றும்
கேட்டுக் கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்சக் கிழக் குரங்கால்
வேட்டுக் கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே
74. போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுதப் புணர் முலையைப்
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிகச்
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருளத் தொடங்குகவே
75. இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம்
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல்
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கயக்
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனைக் காத்து அருளே
76. படி பட்ட மாயையின்-பால் பட்ட சாலப் பரப்பில் பட்டே
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ
பிடிபட்ட நேர் இடைப் பெண் பட்ட பாகப் பெருந்தகையே
77. உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடிச் சீர்
தடை யாதும் இன்றிப் புகல்வது அல்லால் இச் சகத்திடை நான்
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால்
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே
78. தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையைத் தவிர் உனக்கு ஓர்
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய்
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணிச் சுடரே
79. பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ
ஒறுத்தாலும் நன்று இனிக் கைவிட்டிடேல் என்னுடையவன் நீ
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே
80. சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால்
மேல் வரும் நீ வரத் தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன்
கால் வருமே இளம் கன்று அழத் தாய்ப்பசுக் காணின் மடிப்
பால் வருமே முலைப் பால் வருமே பெற்ற பாவைக்குமே
81. வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின்
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம்
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே
82. நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில்
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல்
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே
83. கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும்
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும்
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும்
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே
84. விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணிப் பதி
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான்
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த
பதிக்கும் பதி சித். பதி எம் பதி நம் பசுபதியே
85. எனை அடைந்து ஆழ்த்திய துன்பச் சுமையை இறக்கு எனவே
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய்
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே
86. வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே
தினம் போய்வரும் இச் சிறியேன் சிறுமைச் செயல்-அது போய்ச்
சினம் போய்க் கொடும் பகைக் காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா
இனம் போய்க் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே
87. பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமலப்
பொன்_தாள் அருள் புகழ்க் கற்று ஆய்ந்து பாடப் புரிந்து அருளே
88. அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம்
பொன்_நாணைக் காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய்
இ நாள் நையா வகை என் நாணைக் காத்து அருள் ஏழைக்கு நின்
றன் ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே
89. பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இப் பாரிடை நல்
சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அத் திரு_இலிகள்
அவ சாதனங்களைக் கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ
கவசாதனம் எனக் கைம்மான் உரியைக் களித்தவனே
90. நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே
ஊன் செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர்
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றைத்
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே
91. உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்றுப் பெற்ற
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும்
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே
92. வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்கக்
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல்
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலைப்
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே
93. அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே
இன்பு அரிதாம் இச் சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல்
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே
94. மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில்
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே
மெய் கண்ட நான் மற்றைப் பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே
95. வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த
காணிக்கு-தான் அரைக் காணி மட்டாயினும் காட்டு கண்டாய்
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே
96. மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள்
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மனக்
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் எனக் கூவிடும் என்
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே
97. முன்_மழை வேண்டும் பருவப் பயிர் வெயில் மூடிக் கெட்ட
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்தப் பெற்றியைப் போல்
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கியக் கால்
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே
98. நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ
சூளாத முக்கண் மணியே விடேல் உனைச் சூழ்ந்த என்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே
99. வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய்
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே
100. காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்கச் சென்றே
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர்
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும்
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே
101. அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம்
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே
102. பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம்
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே
103. நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம்
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-
தான் அடங்காது எங்கும் தான் அடங்காது எனத் தான் அறிந்தும்
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே
104. பாம்பு ஆயினும் உணப் பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால்
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக் கடாத்
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார்
தேம் பாய் மலர்க் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே
105. நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடிச் செல்வோர்
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழைப் பழமும் கொள்ளத்
தெருப் புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே
106. எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண்
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன்
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே
107. கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கணப் பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும்
கொல்லாமல்_கொன்று எனைத் தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே
108. தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான்
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய்
வெவ் வழி நீர்ப் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே
109. கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே
110. அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலறச்
சும்மா அச் சேய் முகம் தாய் பார்த்து இருக்கத் துணிவள்-கொலோ
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண்
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே
111. ஓயாக் கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால்
தோயாக் கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லைச் சொல்லி
வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவைத்
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே
112. மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான்
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார்
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே
113. ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலைத் தலை மேல்
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவப் பேய்கள் இறங்கிடுமே
114. அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர்
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவைக் கண்டு எனும்
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இக் கடலிடத்தே
115. காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழு
நீரே எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று
சேரேல் இறுகச் சிவாயநம எனச் சிந்தைசெய்யே
116. வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய்ப் புலம்ப
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே
117. குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளைக் குரங்குக்கு இங்கே
வருந்து ஆணவம் என்னும் மானிடப் பேய் ஒன்று மாத்திரமோ
பெரும் தாமதம் என்று இராக்கதப் பேயும் பிடித்தது எந்தாய்
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே
118. பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல்
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியைத்
திண் மணிக் கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே
119. அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர்
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்குக் கனிவு இரக்கம்
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழுத்
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே
120. ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தைத் தான் கொண்டு அருள் அளிக்கும்
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்குக்
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர்
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணைத் தடம் கடலே
121. கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும்
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால்
புண் கொண்ட மேனிப் புறம் கண்டிலேன் அப் புறத்தைக் கண்டால்
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே
122. வேய்க்குப் பொரும் எழில் தோள் உடைத் தேவி விளங்கும் எங்கள்
தாய்க்குக் கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த
நாய்க்குக் கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர்
வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே
123. காண்டத்தில் மேவும் உலகீர் இத் தேகம் கரும் பனை போல்
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும்
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான்
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே
124. வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில்
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர்
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்குக்
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே
125. மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா
போகல் ஐயா எனப் பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ
ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே
126. ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார்
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே
127. பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள்
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன்
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே
128. மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண்
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக்
கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே
129. என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என்
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு எனச் சுற்றும் நெஞ்சத்
தின் மேல் பிழை அது புல் மேல் பனி எனச் செய்து ஒழிக்க
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே
130. மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான்
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம்
கைவிட்டிடான் எனக் கைவிட்டிடேல் வந்து காத்து அருளே
131. நல் அமுதம் சிவை தான் தரக் கொண்டு நின் நல் செவிக்குச்
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை
இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள்
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே
132. சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின்
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே
நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே
133. சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி
நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர்
இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே
134. திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே
வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற
ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே
கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே
135. சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர்
கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப்
பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே
136. தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டு வரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே
137. பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான்
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடைக் கனியே
138. கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_
மங்கை கொண்டாய் இடப் பாகத்திலே ஐய மற்றும் ஒரு
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர்
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே
139. வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன்
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய்
கீள் கொண்ட கோவணப் பேர்_அழகா எனைக் கேதம் அற
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே
140. வீட்டுத் தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்
மாட்டுத் தலை பட்டி_மாட்டுத் தலை புன் வராகத் தலை
ஆட்டுத் தலை வெறி_நாய்த் தலை பாம்பின் அடும் தலை கல்
பூட்டுத் தலை வெம் புலைத் தலை நாற்றப் புழுத் தலையே
141. தெள் நீர்_முடியனைக் காணார்-தம் கண் இருள் சேர் குருட்டுக்
கண் நீர் சொரிந்த கண் காசக் கண் புன் முலைக் கண் நகக் கண்
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமைக் கண் புன் கண் வன் கண்
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே
142. கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய்க் கதை ஒலியும்
அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும்
துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்
துண்ணுற வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே
143. மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய்த் தெரு மண் உண்ட வாய்
பிணி கொண்ட வாய் விடப் பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய்
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய்
குணி கொண்ட உப்பிலிக் கூழ் உண்ட வாய் எனக் கூறுபவே
144. சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம்
சுகம் இலையே உணச் சோறு இலையே கட்டத் தூசு இலையே
அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே
இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே
145. பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே
செங்கரும்பே நறும் தேனே மதுரச் செழும் கனியே
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணிச் சிவ_கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே
146. வில்லைப் பொன்னாக் கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புறச் செங்
கல்லைப் பொன் ஆக்கிக் கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார்
புல்லைப் பொன்னாக் கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க
வல்லைப் பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே
147. கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழிச்
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனைத் தாங்குதற்கு ஓர்
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே
148. வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின்
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர்
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல்
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே
149. எனைப் பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும்
உனைப் பெற்ற உள்ளத்தவர் மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு-
தனைப் பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பைப் பெற்றால்
வினைப் பெற்ற வாழ்வின் மனைப் பெற்றம் போல மெலிவது இன்றே
150. நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல்
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அக் குறிப்பு எனவே
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடிக் கீழ்
உறை மதியாக் கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே
151. துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர்ப் பொன்
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்
படி வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இப் பாவிக்கு மால்
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே
152. ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம்
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனைப் பித்தன் என்ற
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர்
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே
153. வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர்ப் பொன்
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே
154. விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும்
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும்
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே
155. தண் மதியோ அதன் தண் அமுதோ எனச் சார்ந்து இருள் நீத்து
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி
பெண் மதியோ அன்றிப் பேய் மதியோ என்ன பேசுவதே
156. பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்
கட்டுக்கும் பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே
157. மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கிக்
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம்
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே
158. தவமே புரியும் பருவம் இலேன் பொய்ச் சக நடை-கண்
அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம்
சிவமே முக்கண் உடைத் தேவே நின் சித்தம் தெரிந்திலனே
159. மட்டு உண்ட கொன்றைச் சடை அரசே அன்று வந்தி இட்ட
பிட்டு உண்ட பிச்சைப் பெருந்தகையே கொடும் பெண் மயலால்
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இக் கல்_மனமாம்
திட்டுண்ட பேய்த் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே
160. ஆட்டுக்குக் கால் எடுத்தாய் நினைப் பாடலர் ஆங்கு இயற்றும்
பாட்டுக்குப் பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அப் பாட்டு எழுதும்
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடா
மாட்டுக்கு வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே
161. ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும்
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதைச் சூழ்ந்து கற்றுச்
செப்பு அற்ற வாய்க்குத் திரு உளதோ சிறிதேனும் உண்டேல்
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே
162. சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியைச் சேர்த்தி அந்த
நால்வரும் செய் தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச் சற்றே
கால் வரும் ஆயினும் இன்புருவாகிக் கனி மனம் அப்
பால் வருமோ அதன்-பால் பெண்களை விட்டுப் பார்க்கினுமே
163. கார்முகமாகப் பொன் கல் வளைத்தோய் இக் கடையவனேன்
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இப்
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்கப் பரிந்திலதே
164. வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-
தான் வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய்
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினைப் போல வளர்ப்பவரே
165. அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுரச்
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது
இல் கண்ட மெய்த் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம்
கற்கண்டு எனினும் அக் கல் கண்ட காக்கை நிற்காது என்பரே
166. சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய்
வெல்லுகின்றோர் இன்றிச் சும்மா அலையும் என் வேட நெஞ்சம்
புல்லுகின்றோர்-தமைக் கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய்
மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே
167. சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இத் தீனர்கட்கு இங்கு
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே
பேரிடுவார் வம்புப் பேச்சிடுவார் இந்தப் பெற்றி கண்டும்
போரிடுவார் நினைப் போற்றார் என்னே முக்கண் புண்ணியனே
168. சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான்
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண்
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே
169. இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்
கணையே கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும்
புணையே திரு_அருள் பூரணமே மெய்ப் புலம் அளிக்கும்
துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ளத் துணிந்து அருளே
170. நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல்
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல்
கலை காட்டிக் கட்டு_மயிர்த் தலை காட்டிப் புன் கந்தை சுற்றி
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே
171. விட நாகப் பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என்
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு
இடனாக மெய் நெறிக்கு ஈடாகச் செய்குவது இங்கு உனக்கே
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே
172. நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என்
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால்
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேரச் சற்றும்
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே
173. சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றிச் சூழ்ந்திடு வெம்
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரி
தாபம் கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனைக் குறித்துக்
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்பக் கொதிப்பு அறுமே
174. எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றிச்
சொல்லால் அவர் புகழ் சொல்லாது இவ்வண்ணம் துயர்வதற்கு என்
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே
175. பிறை ஆறு கொண்ட செவ் வேணிப் பிரான் பதப் பேறு அடைவான்
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும்
நிறை ஆறு சூழும் துரும்பாய்ச் சுழலும் என் நெஞ்சின் உள்ள
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இக் குவலையத்தே
176. மால் அறியாதவன் அன்றே அத் தெய்வ வரதனும் நின்
கால் அறியாதவன் என்றால் அக் காலை எக் காலை எமைப்
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய்ப் புண்ணியர்-தம்
பால் அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே
177. ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குணக்
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே
178. தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்குத் தனித்த பெரு
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்பப்
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே
179. வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்குத்
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலில் தள்ளும்
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ளக் கருத்து எதுவே
180. மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம்
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில்
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே
181. மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால்
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர்
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என்
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்குக் காலைக் கொடுத்து அருளே
182. உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய
விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இத்
தடம் பார் சிறு நடைத் துன்பம் செய் வேதனை தாங்க அரிது என்
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனைக் காத்து அருளே
183. மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்
கண்ணாலும் பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின்
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே
184. வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும்
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே
185. ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி
மேடு அறியாது நல் பாட்டைக் கற்றோர் அன்றி மேல் சுமந்த
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே
186. சூடுண்ட பூஞைக்குச் சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உணத் துணியாது
ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே
187. கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்சக்
குரங்கு ஆட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டு கல்லார்
உரம் காட்டிக் கோல் ஒன்று உடன் நீட்டிக் காட்டி உரப்பி ஒரு
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே
188. களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்
றுளம் கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும்
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே
189. மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம்
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம்
தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே
190. ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும்
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவைக் கலித்திடும் நீர்
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்பச்
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே
191. தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞானப் பால் உண்ட செம்மணியைச்
சீர் ஓங்கு முத்துச் சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன்
பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏர் ஓங்கு காப்பைத் திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே
192. வேதனையா மதுசூதனையா என்று வேதனையால்
போதல் நையாநின்று உனைக் கூவும் ஏழையைப் போதனை கேள்
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலரச்
சோதனையாயினும் சோதனை யா சிற்சுகப் பொருளே
193. இன்பு அற்ற இச் சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும்
என்பு அற்ற புன் புழுப் போல் தளர் ஏழை எனினும் இவன்
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே
194. களம் கொண்ட ஓர் மணிக் காட்சியும் முச்சுடர்க் கண் அருளும்
வளம் கொண்ட தெய்வத் திரு_முக மாட்சியும் வாய்ந்த பரி
மளம் கொண்ட கொன்றைச் சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற
உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே
195. காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும்
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர்ச் சேவடி-பால்
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இப்
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே
196. கொங்கு இட்ட கொன்றைச் சடையும் நின் ஓர் பசும் கோமளப் பெண்
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின்
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய்ச்
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே
197. வெம் பெரு மானுக்குக் கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-
தம் பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கைச்
செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்யச் செய்யே
198. சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம்
வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண்
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள்
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே
199. பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர்
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணா
நிதியே சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே
200. என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே
201. கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும்
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச் செந்
தேன் போல் இனிக்கும் சிவாயநம எனச் சிந்தைசெய்யே
202. வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய்
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல்
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினைத் தூய் மணியே
203. இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே
204. சிவசங்கரா சிவயோகா சிவகதிச் சீர் அளிக்கும்
சிவசம்புவே சிவலோகா சிவாநந்தச் செல்வம் நல்கும்
சிவசுந்தரா சிவபோகா சிவாகமச் செந்நெறி சொல்
சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே
205. மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே
துதி சித்து எலாம் வல்ல மெய்ச் சிவமே சிற்சுக சிவமே
கதி நித்த சுத்தச் சிவமே விளங்கு முக்கண் சிவமே
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே
206. கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்தியக் கள்வர் ஐவர்
கொடும் கரணத் துட்டர் நால்வர்கள் வன் மலக் கோளர் ஐவர்
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன்
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே
207. இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும்
விடைக் கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார்
கடைக் கொடி போலக் கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம்
புடைக் கொடியால் அன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே
208. உருமத்திலே பட்ட புன் புழுப் போல் இ உலக நடைக்
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும்
தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ
மருமத்திலே பட்ட வாளியைப் போன்று வருத்துவதே
209. என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின்
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-
தன் இறைவா திதித்தான் இறைவா மெய்த் தபோதனர் உள்
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே
210. போற்றி என் ஆவித் துணையே என் அன்பில் புகும் சிவமே
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்பப் புது நறவே
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே
211. கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடைக் கன்னியர் கண்
நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன்
நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல்
பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே
212. நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும்
வால் முகக் கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின்
தேன் முகக் கொன்றை முடியும் செந்தாமரைச் சேவடியும்
ஊன் முகக் கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே
213. இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர்
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு
ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே
214. ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான்
எண்ணுதலே தொழிலாகச் செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய்
கண்_நுதலே கருணை)_கடலே என் கருத்து இதுவே
215. தளைக்கின்ற மாயக் குடும்பப் பெரும் துயர் தாங்கி அந்தோ
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால்
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே
216. மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா
நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற
செஞ்சடையாய் நின் திரு_பெயராகச் சிறந்த எழுத்து
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே
217. இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன்
மலங்கா நின் வெள்ளி மலைக் கீழ் இருந்து வருந்த நின் சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே
218. உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன்
புடை என்று வெய்யல் உறும் புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே
219. அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே
அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே
220. நிலை அறியாத குடும்பத் துயர் என்னும் நீத்தத்திலே
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய்
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே
221. மெய் அகத்தே கணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இப்
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே
222. முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர்
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார்
இலைக் கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே
223. புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவிச் சிறு பிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம்
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே
224. மனக் கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே
கனக் கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற
தனக் கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம்
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே
225. மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்றுத்
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள்
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புதப் பசும்_தேன்
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே
226. கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்
சேல் ஒன்று கண்ட_மணியான் வரைப் பசும் தேன் கலந்த
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே
227. புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர்ப் போகம் எட்டு
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே
இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே
228. கல் என்று வல் என்று மின்னார் புளகக் கன தனத்தைச்
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண்
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே
229. கள் ஆடிய கொன்றைச் செஞ்சடையோய் நல் கனக மன்றின்
உள் ஆடிய மலர்ச் சேவடியோய் இ உலகியல்-கண்
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்துத்
தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே
230. மருக் கா மலர்க் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால்
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே
செருக்காது உருகிச் சிவாயநம எனத் தேர்ந்து அன்பினால்
ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே
231. மதிக் கண்ணி வேணிப் பெருந்தகையே நின் மலர்_அடிக்குத்
துதி_கண்ணி சூட்டும் மெய்த் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றிப்
பதிக்கு அண்ணி நின்னைப் பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமாக்
கதிக் கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே
232. இரை ஏற்று துன்பக் குடும்ப விகார இருள்_கடலில்
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தைக் கடி மருந்தே
திரை ஏற்று செம் சடைத் தேவே அமரர் சிகாமணியே