February 19

⚽ஆடேடி பந்து⛹️‍♂️

திருச்சிற்றம்பலம்

⚽ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து⚽

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

5. சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.

திருச்சிற்றம்பலம்