ஜீவகாருண்ய ஒழுக்கம் - II
2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய
ஜீவகாருண்ய ஒழுக்கம்
இரண்டாம் பிரிவு
உலகத்தில் உயர்பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.
அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு
எத்தனை வகை என்று அறிய வேண்டில்:-
என மூன்று வகை என்று அறிய வேண்டும்.
சிறிய தேககரணங்களைப் பெற்று,
சிறிய முயற்சியால்,
சிறிய விடயங்களை, சிலநாள் அனுபவிக்கின்ற
இன்பத்தை இம்மை யின்பம் என்றறிய வேண்டும்.
மனிதப்பிறப்பில் தேகத்திலும் கரணங்களிலும் புவனத்திலும் போகங்களிலும், குறைவின்றி நல்லறிவு உடையவர்களாய், பசி, பிணி கொலை முதலிய தடைகளில்லாமல், உறவினர், சினேகர், அயலார் முதலியரும் தழுவ, சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியுடன், விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மையின்ப லாபம்என்றறிய வேண்டும்.
உயர்பிறப்பில் பெரிய தேககரணங்களைப் பெற்று,
பெருமுயற்சியால்,
பெரிய விஷயங்களை, பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை
மறுமை யின்பம் என்றறிய வேண்டும்.
உயர்பிறப்பைப் பெற்று இம்மை இன்பலாபத்தில் குறிக்கப்பட்ட நற்குணங்களெல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமையின்ப லாபம் என்றறிய வேண்டும்.
பேரின்பமாவது:
எல்லாத் தேகங்களையும், எல்லாக் கரணங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் போகங்களையும்,
தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று,
எக்காலத்தும் - எவ்விடத்தும் - எவ்விதத்தும் - எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப்படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்பம் என்று அறிய வேண்டும்.
இம்மை இன்பத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில்:
அன்பு, தயை, ஒழுக்கம், அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை முதலிய சுபகுணங்களைப் பெற்று விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது என்று அறிய வேண்டில்: அன்பு, தயை முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடைபடாமல் முயன்று பலநாள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
பேரின்ப லாபத்தை யடைந்தவர் பெருமை எது என்றறிய வேண்டில்:
தோல், நரம்பு, என்பு, தசை, இரத்தம், சுக்கிலம் முதலிய அசுத்தபூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை மாற்றி, மாற்று இவ்வளவு என்றறியப்படாத உயர்ந்த பொன்னாகிய சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும், பொன்வடிவாகத் தோன்றுதல் மாத்திரமேயன்றி ஆகாயம் போல் பரிசிக்கப்படாத சுத்தபூதகாரண பிரணவ தேகத்தையும் தோன்றப்படுதலுமின்றி, ஆகாயம் போல் விளங்குகின்ற ஞானதேகத்தையும் பெற்றவர்களா யிருப்பார்கள்.
உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்;
புறத்தே மண் கல் முதலியவற்றால் எறியினும் அவை அவர் வடிவில் தாக்குவனவல்ல.
உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள்;
புறத்தே நீரிலழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது.
உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்படார்கள்;
புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவனவல்ல.
உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்;
புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித் தசைக்கமாட்டாது.
உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்;
புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்கமாட்டாது.
ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.
அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் பார்த்தல் முதலிய விஷயங்களையும் பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவனவல்ல;
தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில், சுவர், மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பன வல்ல.
அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்துமுள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த விடத்திருந்தே கண்டறியும்.
அண்ட பிண்டங்களில் எவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த விடத்திருந்தே கேட்டறியும். எவ்விடத்திருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த விடத்திருந்தே சுவைத்தறியும்.
எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த விடத்திருந்தே பரிசித்தறியும்.
எவ்விடத் திருக்கின்ற சுகந்தகங்களையும் அவர் நாசி இருந்த இடத் திருந்தே முகர்ந்தறியும்.
எவ்விடத்திலிருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த விடத்திருந்தே கொடுத்தல் கூடும்.
எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த விடத்திருந்தே நடத்தல் கூடும்.
அவரது வாக்கு எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வௌர்களோடும் இருந்த விடத்திருந்தே பேசுதல் கூடும்.
மற்ற இந்திரியங்கள் இருந்த விடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்தித்தல் கூடும்.
மன முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவனவல்ல;
தயவினால் பற்றத் தொடங்கில் எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்.
அவரறிவு ஒன்றையும் சுட்டியறியாது;
தயவினால் சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பண்புகளையும், எல்லா அனுபவங்களையும், எல்லா பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி யறியும்.
அவர்கள் நிர்க்குணத்தராவார்களல்லது, தாமச - இராசத - சாத்துவிக முதலிய முக்குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்;
புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவனவல்ல.
உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்;
புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவனவல்ல.
உள்ளே காலதத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்;
புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது.
உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்;
புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது.
அன்றிக் காலம், வித்தை, ராகம், புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை.
சுத்தமகாமாயையைக் கடந்து அதன்மேல் அறிவுருவாக விளங்குவார்கள்.
ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் என்பவைகளால் தடைபடார்கள்.
அவர்கள் தேகத்திற்குச் சாயை, வியர்வை, அழுக்கு, நரை, திரை, மூப்பு, இறப்பு முதலிய குற்றங்கள் உண்டானவல்ல.
பனி, மழை, இடி, வெயில் முதலியவற்றாலும், இராக்கதர், அசுரர், பூதம், பிசாசு முதலியவற்றாலும், தேவர், முனிவர், மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்பவைகளாலும் எவ்விடத்தும், எக்காலத்தும் அவர் தேகம் வாதிக்கப்படாது;
வாள், கத்தி முதலிய கருவிகளாலும் கண்டிக்கப்படாது.
எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும், எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரிதாகத் தோற்றலும் அவர் தேகத்திற்கு உரித்து.
முதலிய கருமசித்திகளும், யோகசித்திகளும், ஞானசித்திகளும்
அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.
சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.
பஞ்சகர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்.
அவர்கள் அறிவு கடவுளறிவாக இருக்கும்.
அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.
அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.
சர்வசக்தியு முடையவர்களாய், எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய், ஆணவம், மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் அம்மலவாதனைகளும் இல்லாதவர்களாய், பேரருள்வண்ண முடையவர்களாய் விளங்குவார்கள்.
ஜடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்சகிருத்தியங்களும் செய்யும்.
அவரது பெருமை வேதாந்த, சித்தாந்த, கலாந்த, போதாந்த, நாதாந்த, யோகாந்தம் என்கின்ற ஆறந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்குமென்று அறியவேண்டும்.
இவை பேரின்பலாபத்தை அடைந்தவர் பெருமை யென்று அறிய வேண்டும்.
இம்மூவகை இன்ப லாப வாழ்வையும் எதனால் பெறக்கூடுமென்றறிய வேண்டில்:-
“கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏகதேசத்தைக் கொண்டும் அருட்பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடுமென்றும் அறியவேண்டும்”
இம்மூவகை இன்பங்களில்
'அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையத்தக்கவை எவை? அருட்பூரணத்தைக் கொண்டு அடையத்தக்கது யாது?'என்றறியவேண்டில்:-
என்கின்ற இரண்டையும் அருளின் ஏகதேசத்தைக் கொண்டு அடையக்கூடும் என்றும், பேரின்பலாபம் என்கின்ற ஒன்றையும் அருட்பூரணத்தைக் கொண்டு அடையக்கூடும் என்றும் அறிய வேண்டும்.
கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருள் எந்த வண்ணத்தை உடையது என்றறியவேண்டில்:
சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும்,
நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும்,
அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும்
ஆகிய சர்வசத்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை யுடையது என்று அறிய வேண்டும்.
அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்ற தென்று அறிய வேண்டில்:
நோக்குவார் நோக்குமிடம் - நோக்கப்படுமிடம்,
கேட்பார் கேட்குமிடம் - கேட்கப்படுமிடம்,
சுவைப்பார் சுவைக்குமிடம் - சுவைக்கப்படுமிடம்,
முகர்வார் முகருமிடம் - முகரப்படுமிடம்,
பொருந்துவார் பொருந்துமிடம் - பொருந்தப்படுமிடம்,
பேசுவார் பேசுமிடம் - பேசப்படுமிடம்,
செய்வார் செய்யுமிடம் - செய்யப்படுமிடம்,
நடப்பார் நடக்குமிடம் - நடக்கப்படுமிடம்,
விடுவார் விடுமிடம் - விடுக்கப்படுமிடம்,
நினைப்பார் நினைக்குமிடம் - நினைக்கப்படுமிடம்,
விசாரிப்பார் விசாரிக்குமிடம் - விசாரிக்கப்படுமிடம்,
துணிவார் துணியுமிடம் - துணியப்படுமிடம்,
தூண்டுவார் தூண்டுமிடம் - தூண்டப் படுமிடம்,
அறிவார் அறியுமிடம் - அறியப்படுமிடம்,
அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம் முதலிய எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றதென்று அறியவேண்டும்.
அந்த அருளை எதனால் பெறக்கூடும் என்றறியவேண்டில்:
“ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக்கூடும் என்றறியவேண்டும்”
ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடு மென்பது எப்படி என்று அறியவேண்டில்:
அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம்அல்லது கடவுள் தயவு. ஜீவகாருணிய மென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு. இதனால், ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும், சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் கூடும். சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல்போல என்று அறிய வேண்டும்.
இதனால் ஜீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியப்படும்.
ஜீவகாருணியம் விளங்கும்போது அறிவும், அன்பும் உடனாக விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். ஜீவகாருணியம் மறையும்போது அறிவும், அன்பும் உடனாக நின்று மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத்தீமைகளும் தோன்றும்.
ஆகலில் புண்ணியமென்பது ஜீவகாருணியம் ஒன்றே என்றும்,
பாவமென்பது ஜீவகாருணிய மில்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும். அன்றி, ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகாலறிந்து, அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்ற முத்தர்களென்றும், அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்க ளென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
ஜீவகாருணிய ஒழுக்கத்தின் இலக்கணம் என்னென்று அறிய வேண்டில்:ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள்வழிபாடு செய்து வாழ்தல் என்று அறியவேண்டும்.
ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி என்றறியவேண்டில்:
ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் - காருணியம் - உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்; அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள்வழிபாடு என்று அறிய வேண்டும்.
ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள்விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படி என்று அறியவேண்டில்:
தயிருக்கும், கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக உண்டாக அதன்
அதன் உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவதுபோல் வெளிப்படுமென்று அறியவேண்டும்.
திருவருள் விளங்க அதனால் கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாவது எப்படி என்ற அறியவேண்டில்:
வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படவே அவற்றின் உண்மைத் தன்மை அனுபவமாகிப் பூரணமாவது போல், கடவுள் இன்பம் பூரணமாகும் என்று அறியவேண்டும்.
ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது வெளிப்படும் என்று அறியவேண்டில்:
பசி, கொலை, பிணி, ஆபத்து, தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், கேட்டபோதும், அறிந்தபோதும் ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறியவேண்டும்.
பசி என்பது, ஆகாரம் பொறாமையால் வயிற்றினுள் பற்றி நின்று தேகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து, அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு.
கொலை என்பது, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கம் செய்து, அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய
விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்,
பிணி என்பது, வாத, பித்த, சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு,
தேகத்தின் அகத்தும், புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து,
அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.
ஆபத்துஎன்பது,
அகங்காரத்தாலும், மறதியாலும்,
கரும வேறுபாட்டாலும்
தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள்.
பயம்என்பது, தேக முதலிய கருவிகளுக்கு நட்டம் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்.
இன்மைஎன்பது, கல்வி, செல்வம் முதலிய கருவிகளைத்
தற்சுதந்திரத்தில் பெறாமை.
இச்சை என்பது அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.
இவற்றுள் பசி, கொலை என்பவை
இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம்
என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடை என்றும்;
பிணி, பயம், ஆபத்து, இன்மை என்பவை
இம்மை, மறுமை இன்பங்களைச்
சிறிது தடுத்தலால் இடைப்பட்ட தடை என்றும்,
ஆசை - இம்மை இன்பத்தைச் சிறிது தடுத்தலால்
கடைப்பட்ட தடை என்றும் அறியவேண்டும்.
ஜீவகாருணியத்தின் வல்லபம் யாதென்றறியவேண்டில்:
“பிற உயிர்களிடத்துப் பசி, கொலை முதலியவற்றுள் எதனால் காருணியம் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபம் என்று அறியவேண்டும்.”
ஜீவகாருணித்தின் பிரயோசனம் யாதென்றறியவேண்டில்:
உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது
அதன் பிரயோசனம் என்று அறியவேண்டும்.
இந்த ஜீவகாருணியத்தின் சொரூப - ரூப - சுபாவ - வியாபக முதலியவைகள் மூன்றாவது பிரிவில் கண்டு கொள்ளப்படும்.