November 14, 2023

மூவகை ஞானம்!

*மூவகை ஞானம்!*

*ஞானமென்பது மூன்று வகைப்படும்.!*

*அவை உபாயஞானம், உண்மைஞானம், அனுபவஞானம். இவற்றின் தாத்பர்யம்:*
*நக்ஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவஅறிவே உபாயஞானம்;* *சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்மஅறிவே உண்மைஞானம்;*

*எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம்*

*ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது இந்திரியக்காட்சி, இந்திரியஅறிவு*

*கூடமாக அறிதல் கரணக்காட்சி, கரணஅறிவு;*

*இன்னதென்று தெரிதல் ஜீவக்காட்சி, ஜீவஅறிவு;*

*எதையுந் தானாக அறிதல் ஆன்மக்காட்சி, ஆன்மஅறிவு;*

*இதற்குத் தோன்றுமறிவு 1, தோற்றுமறிவு 1, தோற்றுவிக்குமறிவு 1, பதியறிவு 1.*

*ஆதலால், ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா; அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை; அதன் மயமாதல் காமம்; அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம்;*

*எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.*

*அவாமாத்திரம்
இந்திரியக்காட்சி என்பது ஒரு வஸ்துவின் நாமரூபமின்றிக் காணுதல்;*

*கரணக்காட்சி என்பது அந்த வஸ்துவைப் பற்றல்; அதை அனுபவிக்கவேண்டு மென்கிற சித்தவிருத்தி உண்டாகிறது ஆசை என்னும் காமம்;*

*அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம்.*

*ஆதலால் எந்த வஸ்துவினிடத்திலும் மோகம் காமம் முதலியவை யின்றி அவா மாத்திரமா யிருத்தல் வேண்டும்.*
*சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.*

*ஞான வகை!*

*உபாய ஞானம் - ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.*

*உண்மை ஞானம் - ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.*

*அனுபவ ஞானம் - கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.*

*உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு.*

*உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு.*

*அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.*

*ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.*

*கடவுள் அறிவை தெரிந்து கொள்ள மேலே கண்ட மூன்று வகையான ஞானம் படிப்படியாக அறிந்து தெரிந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*

*வள்ளலார் பாடல்!*

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம்என் றறியாயோ மகளே.!

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.!

அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.!

*மேலே கண்ட பாடல்களில் அறிவின் விளக்கத்தை தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார் வள்ளல்பெருமான்.*

*இதற்கு ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாற வேண்டும். அவ்வாறு மாறினால் மட்டுமே கடவுள் அறிவை அறிந்து அருளைப் பெற முடியும்.*

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !